No results found

    தேர்தல் நடத்தை விதிகள் உடனடி அமல்- வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை


    17-வது பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி முடிவடைகிறது.

    இதனால் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

    தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு கட்சிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தி கருத்துகளை கேட்டறிந்தார். மாநில தேர்தல் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இறுதி கட்ட ஆலோசனை நடந்தது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து ஏற்கனவே முடிவு செய்த நிலையில் அது தொடர்பாக 2 தேர்தல் கமிஷனர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் தேதி அட்டவணை தொடர்பாக அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு ஒப்புதல் அளித்தனர்.

    இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகலில் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ சாதி, மதம் இனம், மொழி உள்ளிட்ட மனக்கசப்பு ஏற்படுத்தும் விஷயங்களை, மக்களை பிளவுபடுத்தும் விஷயங்களை பேசக்கூடாது. அதனால் தேர்தல் நேரத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது.

    அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவது, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், பழைய சம்பவங்கள், பணிகள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒருவரது பொது வாழ்க்கைக்கு சம்பந்தப்படாத தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது.

    ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் மற்றும் தொந்தரவு தரக்கூடாது. சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வீட்டின் முன்னால் பிரசார கூட்டம் என்ற பெயரில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக்கூடாது. அதேபோல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது.

    கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த இடங்களை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தக்கூடாது.

    ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பரிசு வழங்குவது தேர்தல் நடத்தை விதிப்படி குற்றமாகும். வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு வேட்பாளர்கள் பணம் கொடுக்க கூடாது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல வாக்காளர்களை குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. தனிப்பட்ட நபரின் நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.

    ஒரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சியினர் புகுந்து கேள்வி கேட்கக்கூடாது. ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்ற கட்சியினர் கிழிக்கவோ, அகற்றவோ கூடாது. ஒரு கட்சி அல்லது வேட்பாளர் பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி முன்கூட்டியே போலீசிடம் தகவல் அளிக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம்.

    ஊர்வலத்துக்கு அனுமதி பெற்றிருந்தால் அது செல்லும் இடம், நேரம் ஆகியவற்றை பின்னர் மாற்றக்கூடாது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்களின் உருவ பொம்மைகளை எரிக்க கூடாது.

    அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படும். பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் கொடிகள் ஆகியவை மறைக்கப்படும்.

    அரசு கட்டிடங்களில் இடம்பெற்றுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் விளம்பர பலகைகள் மறைக்கப்படும். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் அலுவலகங்களை பூட்டி பொதுப்பணித்துறை வசம் சாவியை ஒப்படைக்க வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிய தலைவர்கள் ஆகியோர் உபயோகப்படுத்தும் அரசு வாகனங்கள் திரும்ப பெறப்படும். அனைத்து மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் நிலைக்குழுக்கள், பணியாற்றுவதற்கான சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான வாகனங்கள் மற்றும் மொபைல், சியூஜி எண்கள் வழங்கப்படும்.

    அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சியினர் தொடர்பான சின்னங்கள், வாசகங்கள் மறைக்கப்படும். அரசு மற்றும் தனியார்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அழிக்கப்படும். அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றப்படும்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். தனி நபர்கள் வைத்துள்ள துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்குதல் மற்றும் புதிய பயனாளிகள் தேர்வு செய்தல் நிறுத்தி வைக்கப்படும். மக்கள் குறைதீர்வு மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் பெறும் நிகழ்வுகள் தடை செய்யப்படும்.

    பறக்கும் படை சோதனையின் போது குறிப்பிட்ட அளவு பணத்துக்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். வங்கி பணபரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்.

    இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகிறது.

    இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. இதில் 96 கோடி பேர் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் ஆவர், இவர்களில் ஆண் வாக்காளர்கள் 49 கோடி பேர். பெண் வாக்காளர்கள் 47 கோடி பேர் ஆவர். இவர்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال